ரஞ்சி டிராபி கிரிக்கெட்; கோவா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தமிழகம்
|89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கோவா,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள்4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. தமிழ்நாடு- கோவா இடையிலான லீக் ஆட்டம் (சி பிரிவு) கோவா கிரிக்கெட் சங்க அகாடமி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கோவா அணி தனது முதல் இன்னிங்சில் 241 ரன்னும், தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் 273 ரன்னும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய கோவா அணி தனது 2வது இன்னிங்சில் 65.5 ஓவர்களில் 168 ரன்னில் முடங்கியது.
இதன்மூலம் தமிழகத்திற்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 26 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.
வெற்றிக்கு வெறும் 76 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் கடைசி நாளான இன்று தொடர்ந்து பேட்டிங் ஆடிய தமிழக அணி 49.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 142 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் சுரேஷ் லோகேஷ்வர் 52 ரன், பிரதோஷ் பால் 65 ரன் அரைசதம் அடித்தனர்.