ரஞ்சி டிராபி கிரிக்கெட்; சவுராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு
|தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கோவை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 3வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிராவை கோவையில் எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த சவுராஷ்டிரா அணி 77.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து முதல் இன்னிங்சில் 183 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது.
தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றிய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 100 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது. தமிழகம் தரப்பில் விஜய் சங்கர் 14 ரன், முகமது அலி 17 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் தொடரந்து பேட்டிங் ஆடிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் 119.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தமிழக அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றது. தமிழகம் தரப்பில் இந்திரஜித் 80 ரன், பூபதி குமார் 65 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 155 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை சவுராஷ்டிரா அணி தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹார்விக் தேசாய் 4 ரன், கெவின் ஜிவ்ரஜனி 27 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஷெல்டன் ஜாக்சன் 2 ரன்னிலும், புஜாரா 46 ரன்னிலும், அர்பித் வஸவதா 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் இறங்கிய சவுராஷ்டிரா வீரர்கள் தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் சவுராஷ்டிரா அணி 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணி 33 ரன் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.