< Back
கிரிக்கெட்
ரஞ்சி டிராபி கிரிக்கெட்; தமிழகம் அபார பந்துவீச்சு - 2வது இன்னிங்சில் 139 ரன்களில் ஆல் அவுட்டான கர்நாடகா

Image Courtesy: @TNCACricket

கிரிக்கெட்

ரஞ்சி டிராபி கிரிக்கெட்; தமிழகம் அபார பந்துவீச்சு - 2வது இன்னிங்சில் 139 ரன்களில் ஆல் அவுட்டான கர்நாடகா

தினத்தந்தி
|
11 Feb 2024 7:13 PM IST

தமிழக அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஜித் ராம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சென்னை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

இந்த தொடரில் தமிழக அணி 'சி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணி தனது முதல் இன்னிங்சில் 119.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கர்நாடகா தரப்பில் படிக்கல் 151 ரன் அடித்தார். தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி கர்நாடகாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தமிழக அணி 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 151 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கர்நாடகா அணி தரப்பில் அதிகபட்சமாக விஜய்குமார் வைஷாக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக இந்திரஜித் 48 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 215 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா தமிழகத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 139 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 355 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 8 ரன்னில் அவுட் ஆனார். விமல் குமார் 16 ரன்னுடனும், பிரதோஷ் பால் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 4ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்