ரஞ்சி டிராபி கிரிக்கெட்; கர்நாடகா அபார பந்துவீச்சு - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் 129/7
|கர்நாடகா அணி தனது முதல் இன்னிங்சில் 366 ரன்கள் குவித்தது.
சென்னை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.
இந்த தொடரில் தமிழக அணி 'சி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து கர்நாடகா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரவிக்குமார் சமர்த் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 20 ரன், சமர்த் 57 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய தேவ்தத் படிக்கல் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் கள இறங்கிய நிகின் ஜோஸ் 13 ரன், மனிஷ் பாண்டே 1 ரன், கிஷன் பெதாரே 3 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து ஹார்டிக் ராஜ் களம் இறங்கினார். இதற்கிடையில் நிலைத்து நின்று ஆடிய படிக்கல் சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கர்நாடகா அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 2ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த கர்நாடகா அணி 119.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கர்நாடகா தரப்பில் படிக்கல் 151 ரன் அடித்தார். தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி கர்நாடகாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தமிழகம் தரப்பில் விமல் குமார் 14 ரன், ஜெகதீசன் 40 ரன், பிரதோஷ் பால் 5 ரன், சுரேஷ் லோகேஷ்வர் 3 ரன், விஜய் சங்கர் 6 ரன், பூபதி குமார் 8 ரன், சாய் கிஷோர் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 56 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தமிழக அணி தரப்பில் இந்திரஜித் 35 ரன், முகமது 3 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். கர்நாடகா தரப்பில் ஷாஷி குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தமிழக அணி இன்னும் 237 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.