ரஞ்சி கிரிக்கெட்: ஜெகதீசன் இரட்டை சதத்தால் தமிழக அணி 489 ரன்கள் குவிப்பு
|முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வே அணி, நேற்றைய ஆட்டம் முடிவில் 35 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
கோவை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, தனது 3-வது லீக்கில் ரெயில்வேயுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்.ஜெகதீசன் 155 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய என்.ஜெகதீசன் நேர்த்தியாக விளையாடினார். அவருடன் இணைந்த கேப்டன் சாய் கிஷோர் (59 ரன்) தவிர யாரும் நிலைக்கவில்லை. தமிழக அணி முதல் இன்னிங்சில் 144 ஓவர்களில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. முதல் தர கிரிக்கெட்டில் முதல்முறையாக இரட்டை சதம் விளாசிய ஜெகதீசன் 245 ரன்கள் (402 பந்து, 25 பவுண்டரி, 4 சிக்சர்) சேர்த்து களத்தில் இருந்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வே அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 35 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. பிரதாம் சிங் 76 ரன்னுடனும், நிஷாந்த் குஷ்வாக் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.