ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 610 ரன்கள் குவித்து டிக்ளேர்
|ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 321 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்
கோவை,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, சண்டிகர் அணியுடன் மோதியது. இந்த போட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சண்டிகர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து இருந்தது. ஜெகதீசன்108 ரன்னுடனும், பிரதோஷ் ரஞ்சன் பால் 87 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஸ்கோர் 278 ஆக உயர்ந்த போது ரஞ்சன் பால் 105 ரன் (13 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ஜெகதீசனுடன், பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்தார். நிலைத்து ஆடிய கோவையை சேர்ந்த ஜெகதீசன் இந்த சீசனில் தனது 2-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து ஜெகதீசன்-பாபா இந்திரஜித் ஜோடி சிறப்பாக ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி சதம் அடித்த பாபா இந்திரஜித் 123 ரன்கள் எடுத்தபோது, கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அதிரடியாக மட்டையை சுழற்றிய ஜெகதீசன் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 321 ரன் (403 பந்து, 23 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்த நிலையில் அர்பித் பன்னு பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன் குவித்த தமிழக வீரர் என்ற சாதனையை 28 வயது ஜெகதீசன் படைத்தார். இதற்கு முன்பு 1988-ம் ஆண்டு ரஞ்சி போட்டியில் கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் டபிள்யூ.வி.ராமன் 313 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை ஜெகதீசன் தகர்த்தார். அத்துடன் முச்சதம் அடித்த 4-வது தமிழக வீரர் என்ற பெருமையையும் அவர் சொந்தமாக்கினார்.
தமிழக அணி முதல் இன்னிங்சில் 126.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய சண்டிகர் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஒரு ரன் எடுத்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.