ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தியது ஆந்திரா
|ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி ஆந்திரா திரில் வெற்றி பெற்றது.
கோவை,
38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழக அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) ஆந்திராவுடன் மோதியது. இந்த ஆட்டம் கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்சில் ஆந்திரா 297 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 112.1 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
48 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆந்திரா 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் தமிழக அணிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணி, தொடக்கத்தில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், பின்வரிசை வீரர்கள் சொதப்பிய காரணத்தினால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் தமிழக அணி 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
அணியின் வெற்றிக்காக போராடிய வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு 65 ரன்களும், பாபா அபராஜித் 45 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி ஆந்திரா திரில் வெற்றி பெற்றது.