ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் மயங்க் அகர்வால் சதத்தால் கர்நாடகா 229 ரன்கள் சேர்ப்பு
|நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசம்-பெங்கால் அணிகள் இடையிலான மற்றொரு அரைஇறுதி ஆட்டம் இந்தூரில் நடக்கிறது.
பெங்களூரு,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சவுராஷ்டிரா-கர்நாடகா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்த சவுராஷ்டிரா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த கர்நாடக அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரவிகுமார் சமார்த் 3 ரன்னிலும், அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 9 ரன்னிலும், நிகின் ஜோஸ் 18 ரன்னிலும், மனிஷ் பாண்டே 7 ரன்னிலும், ஸ்ரேயாஸ் கோபால் 15 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒரு புறம் விக்கெட்டுகள் வீழந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் மயங்க் அகர்வால் சதம் அடித்தார். முதல்தர போட்டியில் அவரது 15-வது சதம் இதுவாகும். ஆட்ட நேரம் முடிவில் கர்நாடக அணிமுதல் இன்னிங்சில் 87 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 110 ரன்னுடனும் (246 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரீனிவாஸ்சரத் 58 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசம்-பெங்கால் அணிகள் இடையிலான மற்றொரு அரைஇறுதி ஆட்டம் இந்தூரில் நடக்கிறது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பெங்கால் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 87 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 307 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் அபிமன்யு ஈஸ்வரன் (27 ரன்), கரண்லால் (23 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தாலும், 3-வது விக்கெட் ஜோடியான அனுஸ்துப் மஜூம்தார் (120 ரன்கள்), சுதீப்குமார் கராமி (112 ரன்கள்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை சிறந்த நிலைக்கு உயர்த்தினர். கேப்டன் மனோஜ் திவாரி 5 ரன்னுடனும், ஷபாஸ் அகமது 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.