ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் மத்தியபிரதேச அணி 170 ரன்னில் சுருண்டது
|ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான அரைஇறுதியில் மத்திய பிரதேச அணி 170 ரன்னில் சுருண்டது.
இந்தூர்,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசம்-பெங்கால் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் இந்தூரில் நடந்து வருகிறது. இதில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது. சுதீப்குமார் கராமி (112 ரன்கள்), அனுஸ்டப் மஜூம்தார் (120 ரன்கள்) சதம் அடித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மத்தியபிரதேச அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மத்தியபிரதேச அணி 79 ஓவர்களில் 170 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சரனாஷ் ஜெயின் 65 ரன்னும், சுப்ஹம் ஷர்மா ஆட்டம் இழக்காமல் 44 ரன்னும் எடுத்தனர். பெங்கால் தரப்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டும், ஷபாஸ் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
268 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கரன்லால் 19 ரன்னிலும், அபிமன்யு ஈஸ்வரன் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சுதீப்குமார் கராமி 12 ரன்னுடனும், அனுஸ்டப் மஜூம்தார் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
கர்நாடகா-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான மற்றொரு அரைஇறுதி ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மயங்க் அகர்வால் 249 ரன்கள் குவித்தார்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து இருந்தது. ஹர்விக் தேசாய் 27 ரன்னுடனும், ஷெல்டன் ஜாக்சன் 27 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று தொடர்ந்து ஆடிய ஹர்விக் தேசாய் 33 ரன்னில் கவுசிக் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதைத்தொடந்து கேப்டன் அர்பித் வசவதா, ஷெல்டன் ஜாக்சனுடன் கைகோர்த்தார். இருவரும் நேர்த்தியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிலைத்து நின்று ஆடிய ஷெல்டன் ஜாக்சனை (160 ரன்) கிருஷ்ணப்பா கவுதம் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். 4-வது விக்கெட்டுக்கு ஷெல்சன் ஜாக்சன்- அர்பித் கூட்டணி 232 ரன்கள் திரட்டியது.
ஆட்ட நேரம் முடிவில் சவுராஷ்டிரா அணி 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் சேர்த்தது. கேப்டன் அர்பித் வசவதா 112 ரன்னுடனும், சிராக் ஜானி 19 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்னும் 43 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் சவுராஷ்டிரா இன்று 4-வது நாளில் விளையாட உள்ளது.