< Back
கிரிக்கெட்
ரஞ்சி கிரிக்கெட்: புதிய சாதனை படைத்த உனட்கட் - டெல்லி அணி 133 ரன்கள் சேர்ப்பு
கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: புதிய சாதனை படைத்த உனட்கட் - டெல்லி அணி 133 ரன்கள் சேர்ப்பு

தினத்தந்தி
|
3 Jan 2023 11:12 PM GMT

சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் டெல்லி அணி 133 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

ராஜ்கோட்,

ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா - டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் யாஷ் துல் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். தனது முடிவு தவறு என்பதை சிறிது நேரத்தில் அவர் உணர்ந்திருப்பார்.

சவுராஷ்டிரா கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜெய்தேவ் உனட்கட் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். அவர் வீசிய 3-வது பந்தில் துருவ் ஷோரே (0) போல்டு ஆனார். தொடர்ந்து 4-வது பந்தில் வைபவ் ரவால் (0), 5-வது பந்தில் கேப்டன் யாஷ் துல் (0) கேட்ச் ஆனார்கள். 88 ஆண்டு கால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 80 'ஹாட்ரிக்' சாதனைகள் பதிவாகியுள்ளன.

ஆனால் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஒரு பவுலர் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றுவது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு மும்பைக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் வினய்குமார் முதலாவது மற்றும் 3-வது ஓவரில் இணைந்து 'ஹாட்ரிக்' விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சிறந்த 'ஹாட்ரிக்'காக இருந்தது.

முதல் ஓவரில் மிரட்டிய ஜெய்தேவ் உனட்கட் தனது அடுத்த இரு ஓவர்களில் ஜான்டி சித்து (4 ரன்), லலித் யாதவ் (0), விக்கெட் கீப்பர் லக்ஷய் தரேஜா (1 ரன்) ஆகியோரையும் காலி செய்தார். இதற்கிடையே புதுமுக வீரர் அயுஷ் பதோனியும் (0) வீழ்ந்தார். வெறும் 10 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து டெல்லி தகிடுதத்தம் போட்டது.

இந்த மோசமான சூழலில் இருந்து அணியை கடைசி கட்ட வீரர்கள் காப்பாற்றி கவுரவமாக 100 ரன்னுக்கு மேல் கொண்டு சென்றனர். பிரன்ஷூ விஜய்ரன் (15 ரன்), ஹிருத்திக் ஷோகீன் (68 ரன், 90 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), ஷிவங் வஷிஸ்ட் (38 ரன்) ஆகியோர் அளித்த இரட்டை இலக்கம் பங்களிப்புடன் டெல்லி அணி முதல் இன்னிங்சில் 35 ஓவர்களில் 133 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

மேலும் இரு விக்கெட்டுகளை கபளீகரம் செய்த ஜெய்தேவ் உனட்கட் மொத்தம் 12 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 39 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா 46 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்துள்ளது.

மேலும் செய்திகள்