ரஞ்சி கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 380 ரன்கள் சேர்ப்பு
|மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 380 ரன்கள் குவித்து 43 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மும்பை,
38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே தமிழ்நாடு 144 ரன்னும், மும்பை 481 ரன்னும் எடுத்தன. 337 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்து இருந்தது.
நேற்று 3-வது நாளில் தொடர்ந்து ஆடிய பாபா அபராஜித் 22 ரன்னிலும், சாய் சுதர்சன் 68 ரன்னிலும் வெளியேறினர். நிலைத்து நின்று ஆடி சதம் அடித்த கேப்டன் பாபா இந்திரஜித் 103 ரன்னில் கேட்ச் ஆனார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தமிழக அணி 105 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 380 ரன்கள் குவித்து 43 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 2-வது சதம் விளாசிய பிரதோஷ் ரஞ்சன் பால் 107 ரன்களுடனும், விஜய் சங்கர் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.