ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில்ஐதராபாத் கேப்டன் தன்மே அகர்வால் சதம்
|ஐதராபாத் அணி ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத்,
38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கியது. இதில் ஐதராபாத்தில் நடக்கும்'பி' பிரிவில் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஐதராபாத்தை சந்தித்தது. 'டாஸ்' ஜெயித்த தமிழக அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்தது. சதம் விளாசிய கேப்டன் தன்மே அகர்வால் 116 ரன்களுடனும், மிக்கில் ஜெய்ஸ்வால் 32 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 3 விக்கெட் சாய்த்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
ரோடாக்கில் நடைபெறும் 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் இமாசலபிரதேசம்-அரியானா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த அரியானா அணி முதல் இன்னிங்சில் 20.4 ஓவர்களில் 46 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நிஷாந்த் சிந்து 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
இமாசலபிரதேச அணி தரப்பில் வைபவ் அரோரா 4 விக்கெட்டும், சித்தார்த் ஷர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இமாசலபிரதேச அணி நேற்றைய முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்தது. பிரசாந்த் சோப்ரா 137 ரன்னில் கேட்ச் ஆனார். ராகவ் தவான் 86 ரன்னுடனும், அங்கித் கல்சி 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.