ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
|இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 32 ரன் எடுத்துள்ளது.
வல்சத்,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
எலைட் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு- குஜராத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் வல்சத்தில் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே குஜராத் 236 ரன்களும், தமிழ்நாடு 250 ரன்களும் எடுத்தன. 14 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்களுடன் தடுமாறியது.
3-வது நாளான நேற்று சரிவில் இருந்து மீண்ட குஜராத் 312 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. மனன் ஹிங்ரஜியா (52 ரன்), உமங் குமார் (89 ரன்), ரிபல் பட்டேல் (81 ரன்) அரைசதம் அடித்தனர். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதன் மூலம் குஜராத் அணி 299 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 32 ரன் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் (18 ரன்), கேப்டன் சாய் கிஷோர் (4 ரன்) களத்தில் உள்ளனர். வெற்றிக்கு இன்னும் 267 ரன்கள் தேவை உள்ள நிலையில், கடைசி நாளான இன்று தமிழக அணி தொடர்ந்து விளையாட உள்ளது.