ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 212 ரன்கள் சேர்ப்பு
|ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தை தடுமாற்றத்துடன் தொடங்கிய டெல்லி அணி 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி,
ரஞ்சி கிரிக்கெட்
38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழக அணி தனது 3-வது லீக்கில் (பி பிரிவு) டெல்லியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த தமிழக கேப்டன் பாபா இந்திரஜித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி டெல்லி முதலில் பேட்டிங் செய்தது. உள்ளூர் ஆடுகளத்தில் பொறுமையாக பேட்டிங் செய்த டெல்லி அணியினர் ஆட்ட நேர முடிவில் 76 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்துள்ளனர். துருவ் ஷோரே (66 ரன்), ஜான்டி சித்து (57 ரன்) அரைசதம் அடித்தனர். தமிழகம் தரப்பில் எல்.விக்னேஷ், சந்தீப் வாரியர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதே பிரிவில் மும்பையில் தொடங்கிய முன்னாள் சாம்பியன் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 79.1 ஓவர்களில் 289 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் அர்பித் வசவதா 75 ரன்கள் எடுத்தார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி 4 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய மும்பைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர வீரர்கள் பிரித்வி ஷா (6 ரன்), ஜெய்ஸ்வால் (2 ரன்) போல்டானார்கள். நேற்றைய முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 18 ரன்னுடனும், கேப்டன் அஜிங்யா ரஹானே 12 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.
8 விக்கெட் வீழ்த்திய பவுலர்
கோவாவின் போர்வோரிமில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் கோவா- கர்நாடகா அணிகள் (சி பிரிவு) மோதுகின்றன. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 3 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஆர்.சமார்த் 140 ரன்கள் (238 பந்து, 14 பவுண்டரி) விளாசிய நிலையில் அர்ஜூன் தெண்டுல்கரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். கேப்டன் மயங்க் அகர்வால் தனது பங்குக்கு 50 ரன்கள் எடுத்தார்.
டேராடூனில் நடக்கும் (ஏ பிரிவு) உத்தரகாண்டுக்கு எதிரான மோதலில் முதலில் களம் இறங்கிய இமாசலபிரதேச அணி 16.3 ஓவர்களில் வெறும் 49 ரன்னில் சுருண்டது. அங்கித் கல்சி (26 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. வேகப்பந்து வீச்சாளர் 32 வயதான தீபக் தபோலா 8 விக்கெட்டுகளை அள்ளினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி 6 விக்கெட்டுக்கு 295 ரன்கள் சேர்த்துள்ளது.
2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.