ரஞ்சி கிரிக்கெட்; பாபா இந்திரஜித் அசத்தல் சதம்... முதல் நாளில் தமிழகம் 291 ரன்கள் குவிப்பு
|ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழகம் - பஞ்சாப் இடையிலான போட்டி இன்று தொடங்கியது.
சேலம்,
89-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி தனது கடைசி லீக்கில் பஞ்சாப்புடன் மோதுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதலில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் வீரர்களில் சுரேஷ் லோகேஷ்வர் 10 ரன்களிலும், ஜெகதீசன் 22 ரன்களிலும், பிரதோஷ் ரஞ்சன் பவுல் 20 ரன்களிலும், முகமது அலி 27 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் கை கோர்த்த பாபா இந்திரஜித் - விஜய் சங்கர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் வலுவான நிலைக்கு முன்னெடுத்து சென்றனர். சிறப்பாக விளையாடிய இந்திரஜித் சதம் விளாசினார். மறுமுனையில் விஜய் சங்கரும் அரைசதத்தை கடந்தார். இந்த இணை முதல் நாளில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டது.
முதல் நாளில் தமிழகம் 4 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்துள்ளது. பாபா இந்திரஜித் 122 ரன்களுடனும், விஜய் சங்கர் 85 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பஞ்சாப் தரப்பில் நேஹால் வதேரா 2 விக்கெட்டுகளும், சித்தார்த் கவுல் மற்றும் அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.