தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: அசாம் 266 ரன்னுக்கு ஆல்-அவுட்
|விக்கெட் வீழ்த்திய தமிழக கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான சாய் கிஷோர் சக வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.
சென்னை,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு - அசாம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 540 ரன்கள் குவித்தது. ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன் பால், விஜய் சங்கர் சதம் அடித்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அசாம் அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அசாம் முதல் இன்னிங்சில் 100.2 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.
அதிகபட்சமாக ஸ்வரூபம் புர்காயஸ்தா 74 ரன்கள் (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். தமிழகம் தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் அஜித் ராம் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 274 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய அசாம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான இன்று அந்த அணி 'டிரா'வுக்காக போராடும்.