ராஞ்சி டெஸ்ட்; 2-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு தூக்கமில்லாமல் தவித்தேன் - துருவ் ஜூரெல்
|இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
தர்மசாலா,
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
முன்னதாக ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 90 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் எடுத்த இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த போட்டி குறித்து துருவ் ஜூரெல் கூறுகையில், '2-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு (இந்தியா 7 விக்கெட்டுக்கு 219 ரன்னில் இருந்தது) இரவில் தூங்க முடியாமல் தவித்தேன். 3-வது நாளில் அதிக நேரம் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்து அணிக்கு எந்த மாதிரி உதவுவது என்பது குறித்து அதிகம் சிந்தித்துக் கொண்டு இருந்தேன். நான் கணிசமாக ரன் குவித்தால் இலக்கை விரட்டுகையில் நெருக்கடியை குறைக்கலாம் என்று யோசித்தேன். கடைசியாக விளையாடும் வீரர்களின் பேட்டிங் மீது சற்று நம்பிக்கை வைப்பது அவசியம். களத்தில் இருக்கும்போது அவர்களுக்கு நம்பிக்கை அளித்தால் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்' என்றார்.