ராஞ்சி டெஸ்ட்; சுப்மன் கில்லுடன் நடந்த வாக்குவாதத்தை பகிர்ந்த ஆண்டர்சன் - என்ன நடந்தது..?
|இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்தை வீழ்த்தி அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடைபெற்ற அந்தத் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே ஏராளமான நிகழ்வுகளும், மோதல்களும் இருந்தன. அதில் ராஞ்சியில் நடந்த கடைசி போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் - இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட மோதல் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது.
அந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் நிதானமாக விளையாடிய சுப்மன் கில் ஒரு கட்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக இறங்கி சென்று அதிரடியான சிக்சரை பறக்க விட்டார். அதனால் கடுப்பான ஜேம்ஸ் ஆண்டர்சன் சில வார்த்தைகளை சொன்னார். அதற்கு சுப்மன் கில்லும் பதிலடி கொடுத்தார். இறுதியில் அந்த நேரத்தில் என்ன நடந்தது? என்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது அது எங்களுக்குள்ளேயே இருப்பது நல்லது என சுப்மன் கில் பின்னணியை தெரிவிக்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் அப்போது சுப்மன் கில்லிடம் நடைபெற்ற வாக்குவாதத்தை ஆண்டர்சன் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆண்டர்சன் கூறியதாவது,
அவரிடம் (கில்) இந்தியாவுக்கு வெளியே நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்துள்ளீர்கள்? என்ற வகையில் கேட்டேன். அதற்கு இது நீங்கள் ஓய்வு பெறுவதற்கான நேரம் என்று கில் என்னிடம் சொன்னார். ஆனால் அடுத்த 2 பந்துகள் கழித்து அவரை நான் அவுட்டாக்கினேன். இது தான் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.