< Back
கிரிக்கெட்
ராஜ்கோட் டெஸ்ட்: மீண்டும் அணிக்கு திரும்பினார் அஸ்வின்

Image : PTI 

கிரிக்கெட்

ராஜ்கோட் டெஸ்ட்: மீண்டும் அணிக்கு திரும்பினார் அஸ்வின்

தினத்தந்தி
|
18 Feb 2024 10:58 AM IST

அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் என பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ராஜ்கோட் ,

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாளில் 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த போட்டியில் 2-வது நாளுக்கு பிறகு இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் குடும்ப மருத்துவ அவசர நிலை காரணமாக அணியில் இருந்து தற்காலிகமாக விலகினார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக இந்திய அணியில் படிக்கல் செயல்பட்டார். மாற்று வீரர் பீல்டிங் மட்டும் செய்ய முடியும் என்பதால் அஸ்வினின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது .

இந்த நிலையில் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் என பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்