< Back
கிரிக்கெட்
அடுத்த சுற்றுக்கு முன்னேறும் உத்வேகத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ்: ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்
கிரிக்கெட்

அடுத்த சுற்றுக்கு முன்னேறும் உத்வேகத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ்: ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
2 May 2024 4:57 AM IST

ராஜஸ்தான் அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கணிக்க முடியாத அணியாக திகழும் ஐதராபாத் அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்து 3 முறை 250 ரன்களுக்கு மேல் குவித்து வரலாறு படைத்துள்ள அந்த அணி, 2-வது பேட்டிங்கில் ஒருமுறை கூட 200 ரன்னுக்கு மேலான இலக்கை எட்டிப்பிடிக்கவில்லை. கடைசி 2 ஆட்டங்களில் இலக்கை விரட்டுகையில் பெங்களூரு, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. எனவே அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (338 ரன்), அபிஷேக் ஷர்மா (303), ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அதிரடியில் பிரமாதப்படுத்துகிறார்கள். அதேநேரத்தில் அவர்களின் ஆட்டம் பொய்த்தால் அந்த அணியின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறுகிறது. ஆல்-ரவுண்டர் எய்டன் மார்க்ரம், அப்துல் சமத் பேட்டில் இருந்து இன்னும் போதிய ரன்கள் வரவில்லை. இவர்களும் பார்முக்கு திரும்பினால், ஐதராபாத்தின் பேட்டிங் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர்குமார் நல்ல நிலையில் உள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, ஒரு தோல்வி (குஜராத் அணிக்கு எதிராக) என்று 16 புள்ளி பெற்று முதலிடத்தில் கம்பீரமாக வீறுநடைபோடுகிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன் (385 ரன்), ரியான் பராக் (332), ஜோஸ் பட்லர் (319), ஜெய்ஸ்வால் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா ஆகியோர் கலக்குகிறார்கள். அஸ்வினின் பந்துவீச்சு எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்: -

ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மார்க்ரம், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத் அல்லது ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, அன்மோல்பிரீத் சிங்.

ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ரோமன் பவெல், ஹெட்மயர், அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான் அல்லது சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

மேலும் செய்திகள்