< Back
கிரிக்கெட்
ஸ்டாய்னிஸ் சிக்சர் மழை...லக்னோ 177 ரன்கள் குவிப்பு...!

Image Courtesy: @IPL

கிரிக்கெட்

ஸ்டாய்னிஸ் சிக்சர் மழை...லக்னோ 177 ரன்கள் குவிப்பு...!

தினத்தந்தி
|
16 May 2023 3:56 PM GMT

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் தரப்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அரைசதம் அடித்தார்.

லக்னோ,

இந்தியாவில் நடைபெற்று வரும் 16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இத்தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறி அசத்தி உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டன.

இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தீபக் ஹூடா மற்றும் டி காக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஹூடா 5 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து களம் இறங்கிய பிரேரக் மன்கட் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டி காக்கும் 16 ரன்னில் வீழ்ந்தார். இதனால் லக்னோ 35 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து கேப்டன் க்ருணால் பாண்ட்யாவும், மார்கஸ் ஸ்டோய்னிசும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த க்ருணால் 42 பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.

இதையடுத்து நிகோலஸ் பூரன் களம் இறங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 36 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். ஜோர்டான் வீசிய 18 ஓவரில் 24 ரன்களை அடித்து அசத்தினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டாய்னிஸ் 8 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினார்.

இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி ஆட உள்ளது.

மேலும் செய்திகள்