ஷாகித் அப்ரிடியை சுட்டிக்காட்டி வம்பிழுத்த பாகிஸ்தான் நிருபருக்கு பதிலடி கொடுத்த ரெய்னா
|டி20 உலகக்கோப்பை தொடரின் தூதுவராக அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் இரண்டும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
2007 முதல் இதுவரை டி20 உலகக்கோப்பைகளில் பெரும்பாலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. அதனால் இம்முறையும் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்காவில் இந்தியா வெற்றிக்கொடியை நிலைநாட்டும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
இதனிடையே இந்த தொடரை பிரபலப்படுத்தும் வகையில் அதன் தூதுவர்களாக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், தடகள ஜாம்பவான் உசைன் போல்ட் ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த வரிசையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியும் இணைந்துள்ளார். அவரும் போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் தூதர் என்ற முறையில் கலந்து கொள்வார் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இதனை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் நிருபர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஷாகித் அப்ரிடியை 2024 டி20 உலகக்கோப்பையின் தூதுவராக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஹலோ சுரேஷ் ரெய்னா?" என்று பதிவிட்டு இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை வம்பிழுத்தார்.
அதற்கு சற்று யோசிக்காத ரெய்னா கொடுத்த பதிலடி பின்வருமாறு:- "நான் ஐ.சி.சி. தூதர் கிடையாது. ஆனால் என்னுடைய வீட்டில் நான் 2011- ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று வைத்துள்ளேன். மொகாலியில் நடைபெற்ற போட்டி உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது அங்கே நிகழ்ந்த சில மறக்க முடியாத நினைவுகளை உங்களுக்கு கொண்டு வரும் என்று நம்புகிறேன்" என்று பதிலடி கொடுத்தார்.
அதாவது மொகாலியில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை அரையிறுதியில் ஷாகித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா கடைசியில் சாம்பியன் பட்டமும் வென்றது. அப்போட்டியில் முக்கியமான ரன்களை எடுத்த ரெய்னா இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.