ராகுல், பண்ட் அல்ல; டி20 உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக இவரை தேர்வு செய்ய வேண்டும் - பிராட் ஹாக்
|வரும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.
புதுடெல்லி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அனைத்து வீரர்களும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ராகுல், பண்ட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இவர்களில் யார் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெறுவார் என ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ராகுல், பண்ட்டை விட சாம்சன் தான் பொறுத்தமானவர் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, என்னை பொறுத்தவரை அது சஞ்சு சாம்சனாக இருக்கலாம். அவர் கடந்த இரண்டு வருடங்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உங்களுக்கு அதிகமாக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர் தேவை. சாம்சன் ஒரு கேப்டனாக இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முன்னோக்கி கொண்டு செல்கிறார். மேலும் அவர் அதை தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்போது, இந்திய தேர்வாளர்கள் அவரை நீண்ட காலத்திற்கு டி20 வடிவத்தில் ஆதரிக்க வேண்டிய நேரம் இது. எனவே என்னைப் பொறுத்தவரை, இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு சாம்சன் தான் பொறுத்தமானவர். ரிஷப் பண்ட இந்த வடிவத்தில் சில அரைசதங்களை பெற்றுள்ளார். ஆனால், அவர் இன்னும் நிலைத்தன்மையுடன் ஆட வேண்டும்.
சாம்சன் பல்வேறு நிலைகளில் பேட்டிங் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் 3வது இடத்தில், அவர் ஒரு கீப்பர்-பேட்டராக சரியான தேர்வு. டி20 உலகக் கோப்பையில் கோலி 3வது இடத்தில் பேட்டிங் செய்தால், கே.எல் ராகுல் மற்றும் பண்ட் ஆகியோருக்கு முன்னால் சாம்சனை கண்டிப்பாக நிறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.