< Back
கிரிக்கெட்
இந்தியாவின் தோல்விக்கு ராகுல் மட்டுமே காரணம் கிடையாது - சுனில் கவாஸ்கர்
கிரிக்கெட்

இந்தியாவின் தோல்விக்கு ராகுல் மட்டுமே காரணம் கிடையாது - சுனில் கவாஸ்கர்

தினத்தந்தி
|
5 Dec 2022 10:08 AM GMT

இந்தியாவின் தோல்விக்கு ராகுல் விட்ட கேட்ச் மட்டுமே காரணம் கிடையாது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மும்பை,

வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வங்காளதேசத்தின் அபார பந்து வீச்சால் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி தரப்பில் கே.எல். ராகுல் மட்டுமே சிறப்பாக ஆடி 73 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வங்காளதேச அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்களும் நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் 136 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி தோல்வி பெறுவது உறுதி என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் 10 வது விக்கெடுக்கு ஜோடி சேர்ந்த மெஹதி ஹசன் மிராஸ் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் நிதானமாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.

அதேவேளையில், மெஹதி ஹசன் மிராஸ் ஷர்துல் தாக்கூர் வீசிய 43 ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் கோட்டை விட்டார். இதையடுத்து அதிரடியாக ஆடிய மெஹதி ஹசன் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தோல்விக்கு ராகுல் விட்ட கேட்சே காரணம் என சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த தோல்விக்கு ராகுல் மட்டுமே காரணம் அல்ல என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உண்மையாக அது தான் தோல்விக்கு காரணம் என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆம் அது கடைசி விக்கெட்டாக இருந்ததால் அதைப் பிடித்திருந்தால் போட்டி முடிந்திருக்கும் என்பதால் அதுவும் தோல்விக்கான காரணம் தான். ஆனால் பேட்டிங்கில் நீங்கள் எடுத்த 186 ரன்களையும் பார்க்க வேண்டும்.

சொல்லப்போனால் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டு 136/9 என்ற நிலைமைக்கு இந்தியாவின் பக்கம் வெற்றியை கொண்டு வந்தார்கள். அப்போது மெஹதி ஹசன் கேட்ச் விட்ட அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அற்புதமாக செயல்பட்டு எதிரணியை அட்டாக் செய்து தைரியமான ஷாட்டுகளை அடித்து வெற்றி பெற வைத்து விட்டார்.

ஆனால் உண்மையாக இந்தியா 80 - 70 ரன்கள் குறைவாக எடுத்தது. ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும். ஏனெனில் ஓவருக்கு வெறும் 4 ரன்களை மட்டும் எடுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது தாமாகவே எதிரணிக்கு அழுத்தம் குறைந்து விடும்.

அழுத்தம் இல்லாத போதிலும் அதிகப்படியான தடுப்பாட்டத்தை போட்டு வங்கதேசம் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்