"ஒவ்வொரு இந்தியரும் காத்திருக்கும் போட்டி.."- இந்திய அணி வெற்றி பெற ராகுல் காந்தி வாழ்த்து
|ஆசிய கோப்பையில் இன்று அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
துபாய்,
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதலை காண்பதற்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி 10 ஆண்டுக்கு மேலாகி விட்டது. ஐ.சி.சி. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன. அதனால் முன்பை விட இப்போது எதிர்பார்ப்பு இன்னும் எகிறி விட்டது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது.
ஆசிய கோப்பையில் இன்று நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக நாங்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளோம். நாட்டு மக்கள் மற்றும் என் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.