500-வது சர்வதேச கிரிக்கெட்டில் இறங்கி சாதனை: இளம் வீரர்களுக்கு கோலி உத்வேகம் அளிக்கிறார் - டிராவிட் புகழாரம்
|500-வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ள பயிற்சியாளர் டிராவிட், அவர் இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளார்.
போர்ட் ஆப் ஸ்பெயின்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நேற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் களம் இறங்கியதன் மூலம் அவர் பங்கேற்ற ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை 500-ஐ எட்டியது. இந்த மைல்கல்லை எட்டிய 10-வது வீரர், இந்திய அளவில் 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். இந்தியாவில் ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர் (664 ஆட்டம்), டோனி (538), ராகுல் டிராவிட் (509) ஆகியோர் 500-க்கும் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளனர்.
34 வயதான விராட் கோலி 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்தார். இதுவரை 111 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியுள்ளார். ஏறக்குறைய 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் விராட் கோலிக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விராட்கோலி எப்படிப்பட்ட வீரர் என்பதை அவர் நிகழ்த்திய சாதனை மற்றும் புள்ளி விவரங்களே பறைசாற்றும். இந்திய அணியில் அவர் நிறைய வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்களுக்கும் உந்துசக்தியாக திகழ்கிறார்.
விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. நான் அவருடன் இணைந்து விளையாடிய போது, அவர் இளம் வீரர். அப்போது அவருடன் அணியில் பெரிய அளவில் தொடர்பில் இருந்ததில்லை. ஆனால் வெளியில் இருந்து அவரது ஆட்டத்தை பார்த்து ரசித்து இருக்கிறேன். அவர் இதுவரை செய்துள்ள சாதனைகளையும், தொடர்ந்து அணிக்கு அளிக்கும் பங்களிப்பையும் பார்த்து வியக்கிறேன். பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பிறகு அவருடன் நெருங்கி பழகியதில், அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொண்டேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகம் தருகிறது. சொல்லப்போனால் பல்வேறு வழிகளில் அவரிடம் இருந்து நானும் கற்றுக்கொள்கிறேன்.
இது அவரது 500-வது சர்வதேச போட்டி என்பது எனக்கு தெரியாது. இந்த நிலையை எட்டியதன் பின்னால் தீவிரமான முயற்சியும், கடினமான உழைப்பும் இருக்கிறது. இதை நிறைய பேர் பார்த்து இருக்க முடியாது.
ஏறக்குறைய 12-13 ஆண்டுகள் கிரிக்கெட் களத்தில் இருக்கிறார் மற்றும் 500-வது சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். ஆனாலும் அவர் இன்னும் வலிமை மிக்கவராகவும், நல்ல உடல்தகுதியுடனும், அதே ஆர்வத்துடனும், களத்தில் துடிப்புமிக்க ஆற்றலை வெளிப்படுத்துபவராகவும் வலம் வருகிறார். உண்மையிலேயே இது அற்புதமானது. ஆனால் இது எளிதான விஷயமல்ல. ஏனெனில் இதற்காக கடினஉழைப்புடன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய தியாகங்களையும் செய்துள்ளார். இதை தொடர்ந்து செய்யவும் விரும்புகிறார். ஒரு பயிற்சியாளராக விராட் கோலியின் சாதனை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் கோலியை பார்த்து இன்னும் ஏராளமான இளைஞர்கள் ஊக்கம் பெறுவார்கள்.
கிரிக்கெட்டில் நீண்டகாலம் நீடிப்பதற்கு கடின உழைப்பு, ஒழுக்கம், சூழலுக்கு தகுந்தபடி அனுசரித்து செயல்படுவது முக்கியம். இதை எல்லாவற்றையும் கோலி செய்து காட்டியுள்ளார். அவரது நீண்ட பயணம் தொடரட்டும்.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆகஸ்டு 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.2-ந்தேதி பாகிஸ்தானை கண்டியில் எதிர்கொள்கிறது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டிராவிட், 'ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியாகியுள்ளது. நாங்கள் முதல் இரு லீக்கில் பாகிஸ்தான், நேபாளத்துடன் மோத உள்ளோம். அதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று, தொடர் எப்படி நகர்கிறது என்பதை பார்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் 3 ஆட்டங்களில் (லீக், சூப்பர்4 சுற்று மற்றும் இறுதிப்போட்டி) விளையாட வாய்ப்பு கிடைத்தால் அருமையாக இருக்கும். அதாவது நாங்கள் இறுதிப்போட்டிக்கு வர வேண்டும். அவர்களும் இறுதிசுற்றை எட்டுவார்கள் என்று நம்புகிறேன். நிச்சயம் இது ஒரு சிறந்த போட்டியாக இருக்கும்' என்றார்.