நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட வாய்ப்பு
|அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது.
மும்பை,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி இன்று வெளியேறியது. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது. முதலில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.
நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார்.
நியூசிலாந்து தொடருக்கு சில நாட்களே உள்ளதால் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணி நேரடியாக நியூசிலாந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளர் டிராவிட்-க்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமண் செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
"இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பந்துவீச்சு பயிற்சியாளர் மாம்ப்ரே மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்புவார்கள். லக்ஷ்மனுடன், ஹிருஷிகேஷ் கனிட்கர் (பேட்டிங் பயிற்சியாளர்) மற்றும் சாய்ராஜ் பஹுதுலே (பந்துவீச்சு பயிற்சியாளர்) நியூஸிலாந்திற்கு செல்வார்கள் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.