இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இனவாத துன்புறுத்தல்; ரசிகர் கைது
|இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்டில் இனவாத துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரசிகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பர்மிங்காம்,
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1ந்தேதி இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்தது. இதனால், தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. எனினும், 2வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 378 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்தது. இந்த போட்டியில், 4வது நாள் ஆட்ட நேர முடிவில், சமூக ஊடகத்தில் எண்ணற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், பர்மிங்காம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பர்மிங்காமில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, இனவாத அடிப்படையில் மற்றும் தகாத வழியில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின்பேரில் 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் விசாரணைக்காக தொடர்ந்து போலீசாரின் காவலில் வைக்கப்பட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது.
டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தின் முடிவில், பிற ரசிகர்களிடம் இருந்து இனவாத துன்புறுத்தல்களை சந்தித்தோம் என இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
யார்க்சைரின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அசீம் ரபீக் கூட இதனை டுவிட்டரில் சுட்டி காட்டினார். கடந்த ஆண்டு கிளப்பல் நடந்த இனவாத துன்புறுத்தலை பற்றி அவர் கூறிய குற்றச்சாட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.
இனவாத துன்புறுத்தலுக்கு எதிராக பூஜ்ய சகிப்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, வார்விக்சைர் கவுன்டி கிரிக்கெட் கிளப்பும் உறுதிமொழி அளித்து இருந்தது.