ரச்சின் ரவீந்திரா போராட்டம் வீண்... பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை
|நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 63 ரன் வித்தியாசத்தில் இலங்கை திரில் வெற்றி பெற்றது.
காலே,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை தனது முதல் இன்னிங்சில் 305 ரன்களும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 340 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 35 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை 309 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் கருணாரத்னே 83 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து நியூசிலாந்துக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நியூசிலாந்து அணியில் கான்வே 4 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குப்பிடித்த வில்லியம்சன் 30 ரன்களிலும், டாம் லதாம் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரச்சின் ரவீந்திரா தனி ஆளாக போராட மறுமுனையில் அவருக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
இறுதியில் நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் அடித்திருந்தது. ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர்.
நியூசிலாந்து வெற்றி பெற 68 ரன்கள் அடிக்க வேண்டியுள்ள நிலையிலும், இலங்கை வெற்றி பெற 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்த வேண்டும் என்ற நிலையிலும் இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது. பரபரப்பாக ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எஞ்சிய 2 விக்கெட்டுகளை இலங்கை வீழ்த்தியது. நியூசிலாந்து 71.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 211 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 63 ரன் வித்தியாசத்தில் இலங்கை திரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 92 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது.