ரச்சின் ரவீந்திரா சதம் வீண்... நியூசிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி..!
|ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தாலும், மறுபுறம் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த ரச்சின் ரவீந்திரா, சதம் அடித்து அசத்தினார்.
தர்மசாலா,
உலகக்கோப்பை தொடரில் இன்று தர்மசாலாவில் நடைபெற்ற வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் ஹெட் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே நியூசிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இருவருடைய அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
அணியின் ஸ்கோர் 175 ஆக உயர்ந்த போது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 81 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் சதம் அடித்த நிலையில் 109 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய மார்ஷ் 36 ரன், ஸ்மித் 18 ரன், லபுஸ்சாக்னே 18 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். பின்னர் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்க்லிஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 41 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலியா 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 388 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹெட் 109 ரன், வார்னர் 81 ரன் அடித்தனர். இதையடுத்து 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர். இந்த ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. வில் யங் 32 ரன்னிலும், கான்வே 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா- டேரில் மிட்சேல் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. டேரில் மிட்சேல் அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தாலும், மறுபுறம் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த ரச்சின் ரவீந்திரா, சதம் அடித்து அசத்தினார். அவர் 89 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் டாம் லேதம் 21 ரன்னிலும், கிளென் பிலிப்ஸ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனினும், நீஷம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டம் பரபரப்பானது. அதிரடியை ஆட்டத்தால் அரைசதம் அடித்த நீஷம், அணியை வெற்றி இலக்குக்கு அருகில் கொண்டுசென்றார். அவரால் அணியை வெற்றிபெறச்செய்ய முடியவில்லை. கடைசி ஓவரில் அவர் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 383 ரங்களே எடுத்தது. இதனால், பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.