தரமான வீரர் தான் ஆனால் அவர் இல்லாமலும் இந்திய அணியால் ஜெயிக்க முடியும் - டேல் ஸ்டெய்ன் கருத்து
|இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜஸ்ப்ரீத் பும்ரா மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார்.
அந்த வகையில் தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு பந்து வீச்சு துறையில் அவர் இன்றியமையாத முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் பும்ரா மிகவும் தரமான வீரர் என்றாலும் அவர் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை இந்திய அணியில் இல்லை என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய வீரராக இருந்தால் நிறைய பணிச்சுமை ஏற்படும். ஏனெனில் இந்தியாவில் நிறைய போட்டிகள் விளையாடப்படுகின்றன. உலகில் அதிகம் தேடப்படும் அணிகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதே சமயம் பும்ரா விளையாடாமல் போனால் அதற்காக இந்திய அணி எதையும் தவற விடப்போவதில்லை. ஏனெனில் அடுத்ததாக காலடி வைக்கும் பவுலர்கள் தேவையான தரத்தைக் கொண்டிருக்கிறார்கள். அது இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் வரவாகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக செயல்படும் பவுலர்களால் டி20 போட்டிகளிலும் நன்றாக செயல்பட முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதால் வேகத்தை மாற்றுவது, எப்போது மெதுவான பந்தை பயன்படுத்த வேண்டும், எப்போது பவுன்சர் வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
எனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்துவதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது அவசியம் என்பதை அனைத்து பவுலர்களும் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.