பஞ்சாப் அபார பந்து வீச்சு: சென்னை 167 ரன்கள் சேர்ப்பு
|பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
தர்மசாலா,
ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ரகானே 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கெய்க்வாட் - டேரில் மிட்செல் ஒரளவு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர்.
இவர்களில் கெய்க்வாட் 32 ரன்களிலும், டேரில் மிட்செல் 30 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய துபே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் மொயீன் அலி 17 ரன்களிலும், சாண்ட்னர் 11 ரன்களிலும் அவுட்டாகினர். மறுபுறம் ஜடேஜா பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய எம்.எஸ். தோனி சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் பேட்டிங் செய்ய உள்ளது.