ஹெட்மயர், ஜுரல் அதிரடி வீண் : 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி
|ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
கவுகாத்தி,
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரகளாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 34 பந்தில் 60 ரன் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆனார். பிரப்சிம்ரன் - ஷிகர் இணை முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பானுகா ராஜபக்சே களம் இறங்கினார். அவர் 1 பந்தில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஷிகர் தவான் அடித்த பந்து அவரது கையில் பலமாக தாக்கியது. இதன் காரணமாக அவர் வெளியேறினார்.
இதையடுத்து ஜித்தேஷ் சர்மா, தவானுடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் 36 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் சர்மா 27 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த சிக்கந்தர் ராஸா 1 ரன் எடுத்த நிலையில் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷாருக்கான் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 86 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 60 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹொல்டர் 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 11 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து அஸ்வின் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 19 (11) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக சஞ்சு சாம்சனுடன், பட்டிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சீரான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்நிலையில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த சாம்சன் 42 (25) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கி அதிரடியாக ரன் சேர்த்த ரியான் பராக் 20 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து பட்டிக்கல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறக்கிய ஹெட்மயர் மற்றும் ஜுரைல் ஆகியோர் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியில் ஹெட்மயர் 36 (18) ரன்களில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுரைல் 32 (15) ரன்களும், ஹொல்டர் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக நாதன் எல்லீஸ் 4 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.