பி.எஸ்.எல். இறுதிப்போட்டி; டிரெஸ்ஸிங் அறையில் புகைப்பிடித்த பாகிஸ்தான் வீரர்..? - வீடியோ
|பி.எஸ்.எல்.தொடரின் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் வெற்றி பெற்றது.
கராச்சி,
6 அணிகள் கலந்து கொண்ட 9வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வந்தது. இதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ், இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. முல்தான் அணி தரப்பில் உஸ்மான் கான் 57 ரன்கள் எடுத்தார்.
இஸ்லாமாபாத் யுனைடெட் அணி தரப்பில் இமாத் வாசிம் 5 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இஸ்லாமாபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்கள் எடுத்து முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இஸ்லாமாபாத் அணி தரப்பில் மார்ட்டின் கப்தில் 50 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை இமாத் வாசிம் பெற்றார். தொடர் நாயகன் விருது ஷதாப் கானுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற இமாத் வாசிம் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அதாவது முதல் இன்னிங்சில் பந்து வீசி 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இமாத் வாசிம் ஆட்டத்தின் 17வது ஓவர் முடிந்ததும் வீரர்களின் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். அங்கு அவர் புகைப்பிடித்தது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.