புரோ செஸ் லீக்: உலக சாம்பியன் கார்ல்செனை வீழ்த்தினார் விதித் குஜராத்தி
|5 முறை உலக சாம்பியனான கார்ல்செனை வீழ்த்திய 4-வது இந்தியர் என்ற பெருமையை விதித் குஜராத்தி பெற்றார்.
சென்னை,
புரோ செஸ் லீக் போட்டி ஆன்-லைன் மூலம் நடந்து வருகிறது. 16 அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியன் யோஜிஸ் அணி வீரர் கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராத்தி, கனடா செஸ்பிரக்ஸ் அணிக்காக ஆடும் நடப்பு உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்செனை சந்தித்தார்.
ரேபிட் வகை போட்டியான இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய மராட்டியத்தை சேர்ந்த 28 வயதான விதித் குஜராத்தி, கார்ல்சென் செய்த தவறை சாதுர்யமாக தனக்கு சாதகமாக மாற்றி அவரை முதல்முறையாக வீழ்த்தினார்.
இதன் மூலம் 5 முறை உலக சாம்பியனான கார்ல்செனை (நார்வே) வீழ்த்திய 4-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு இந்திய வீரர்களில் பிரக்ஞானந்தா, டி.குகேஷ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் கார்ல்செனுக்கு அதிர்ச்சி அளித்து இருந்தனர். அந்த பட்டியலில் விதித் குஜராத்தி இணைந்துள்ளார்.