< Back
கிரிக்கெட்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடிய இந்திய இளம் வீரர் குறித்து பாண்டிங் வருத்தம்
கிரிக்கெட்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடிய இந்திய இளம் வீரர் குறித்து பாண்டிங் வருத்தம்

தினத்தந்தி
|
30 July 2024 9:51 AM IST

டெல்லி அணியில் பிரித்வி ஷா-வுக்கு தம்மால் அதிக வாய்ப்பை கொடுத்து அசத்த வைக்க முடியவில்லை என ரிக்கி பாண்டிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிட்னி,

இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி கோப்பை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக வெகு விரைவிலேயே 2018-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிக்கு பின்னர் அவர் இதுவரை இந்திய அணிக்கு திரும்பவில்லை. இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா வெகு விரைவாகவே பார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார்.

இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடிய பிரித்வி ஷா 8 போட்டிகளில் விளையாடி 185 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்காத டெல்லி நிர்வாகம் 22 வயதாகும் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர்-மெக்குர்க்கை ஓப்பனங்கில் களமிறக்கியது. அந்த வகையில் இந்த வருடமும் பிரிதிவி ஷா சுமாராக செயல்பட்டு கம்பேக் கொடுக்க தவறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இந்திய வீரர் பிரிதிவி ஷா- வுக்கு தம்மால் அதிக வாய்ப்பை கொடுத்து அசத்த வைக்க முடியவில்லை என அந்த அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "தனிநபர் வீரர்களை பற்றி பேசுவதை நான் விரும்ப மாட்டேன். ஆனால் பிரித்வி ஷா ஒவ்வொரு அணியிலும் இருக்கக்கூடிய ஒரு வீரர். தம்மிடம் கொண்டுள்ள திறமைக்கு அவர் பெரும்பாலான அணிகளில் முதல் தேர்வாக இருப்பார். தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த அவர் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் இந்த வருடம் பாதி சீசனுக்கு மேல் டெல்லி அணியில் அவருக்கான இடத்தை எங்களால் கண்டறிய முடியவில்லை. அவரைப் போன்ற வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளைக் கொண்டு வந்து சிறந்தவர்களாக உருவாக்க முடியாதது ஒரு பயிற்சியாளராக எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

அப்படி வீரர்களை சிறந்தவர்களாக மாற்ற முடியவில்லை என்று உணரும்போது நீங்கள் எதிர்பார்க்கக் கூடியவற்றை செய்யும் மற்ற வீரர்களை பார்ப்பீர்கள். பிரித்வியை சிறந்த கிரிக்கெட்டராக உருவாக்க அவரிடம் நான் நிறைய பேசினேன். இப்போதும் இளம் வீரராக இருக்கும் அவரிடம் திறமை இருக்கிறது. எனவே ஒருநாள் அவருக்கான நேரம் வந்து வேலை செய்து பிரித்வி ஷா சிறந்த கிரிக்கெட்டராக வருவார் என்று நம்புகிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்