< Back
கிரிக்கெட்
தனது சிக்சரால் காயமடைந்த ரசிகைக்கு பரிசளித்த பொல்லார்ட் - வீடியோ வைரல்
கிரிக்கெட்

தனது சிக்சரால் காயமடைந்த ரசிகைக்கு பரிசளித்த பொல்லார்ட் - வீடியோ வைரல்

தினத்தந்தி
|
23 July 2024 12:27 PM IST

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

டல்லாஸ்,

6 அணிகள் இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் எம்.ஐ.நியூயார்க் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 131 ரன் இலக்கை நோக்கி களம் இறங்கிய எம்.ஐ.நியூயார்க் அணியில் டேவல்ட் பிரீவிஸ் 27 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 35 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நியூயார்க் அணியின் கேப்டன் பொல்லார்ட் 12 பந்தில் 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார். நியூயார்க் அணி 17 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 134 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூயார்க் அணியின் கேப்டன் பொல்லார்ட் சிக்சர்களைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த நிலையில், அவர் விளாசிய ஒரு சிக்சரானது மைதானத்தில் இருந்த ரசிகை ஒருவரை காயமடைய செய்தது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் அந்த ரசிகைக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளித்தனர்.

இதனையடுத்து போட்டி முடிந்ததும் எம்.ஐ. நியூயார்க் அணியின் கேப்டன் பொல்லார்ட், தனது சிக்சரால் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேற்கொண்டு அவர் தனது கையொப்பமிட்ட தொப்பியையும் அந்த ரசிகைக்கு பரிசளித்தார். பொல்லார்ட், காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து தொப்பியை பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகள்