ரிஷப் பண்ட் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
|கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார்.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். ஆனால், அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட உடன் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ரிஷப் பண்டை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தற்போது டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரிஷப் பண்ட் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கார் விபத்தை சந்தித்த ரிஷப் பண்ட்டின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார். பிரதமர் மோடியில் வார்த்தைகளுக்கும், உத்தரவாதத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.