தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி: பிரதமர் மோடி பாராட்டு
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
புதுடெல்லி,
பார்வையற்றவர்களுக்கான சர்வதேச விளையாட்டு சங்கம் சார்பில் பார்வையற்றவர்களுக்கான உலக விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 114 ரன்னில் கட்டுபடுத்தப்பட்டது. பின்னர் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் மாற்றியமைக்கப்பட்ட 42 ரன் இலக்கை இந்திய அணி 3.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஐபிஎஸ்ஏ உலக விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள்! நமது விளையாட்டுப் பெண்களின் அசைக்க முடியாத மனப்பான்மையையும் திறமையையும் எடுத்துக்காட்டும் ஒரு மகத்தான சாதனை. இந்தியா பெருமை கொள்கிறது!" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.