தயவுசெய்து விராட் கோலியை அந்த இடத்தில் விளையாட வையுங்கள் - ஏபி டி வில்லியர்ஸ் கோரிக்கை
|நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார்.
கேப்டவுன்,
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. சூப்பர் 8 சுற்றில் இந்தியா, தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது.
முன்னதாக நடப்பு தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி லீக் சுற்றில் அசத்தவில்லை. 3 போட்டிகளில் முறையே 1, 4, 0 என்ற சொற்ப ரன்களில் அவுட்டாகி அணிக்கு பின்னடைவையும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்தார்.
எனவே அவரை மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறக்க வேண்டும் என்பது பல ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஏனெனில் கடந்த காலங்களில் 3வது இடத்தில் களமிறங்கிய அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்து 2 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். ஆனால் இம்முறை துவக்க வீரராக களமிறங்கிய அவர் முதல் முறையாக டக் அவுட்டானார்.
இந்நிலையில் காரணமின்றி விராட் கோலி துவக்க வீரராக களமிறக்கி வீணடிக்கக்கூடாது என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். மேலும் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடும் யுக்தியை கடந்த டி20 உலகக்கோப்பையில் தவற விட்டு இந்தியா தோல்வியை சந்தித்ததாக டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாடினால் உலகக்கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்தியா தரமான அணியை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தயவுசெய்து விராட் கோலியை 3வது இடத்தில் விளையாட வையுங்கள் என்று நான் எப்போதும் சொல்கிறேன். தற்போது இந்தியா நல்ல பிட்ச்சில் விளையாட உள்ளது. எனவே விராட் கோலி 3வது இடத்தில் அசத்தக்கூடியவர். அட்டாக் செய்து விளையாடும் திறமையை கொண்டுள்ள அவர் தேவைப்பட்டால் அழுத்தத்தை உள்வாங்கி நங்கூரமாகவும் விளையாடுவார். மிடில் ஓவர்களில் அவர் உலகின் மிகச்சிறந்த வீரர். எனவே அவர் துவக்க வீரராக விளையாடுவதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. இந்தியா ஒரு தரமான அணி. எனவே வேகத்தை பெறுவதற்கு விளையாட்டின் ஆரம்பத்தில் அவர்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.