ரசிகர்களே எங்களை மன்னித்து விடுங்கள் - இலங்கை முன்னணி வீரர்
|டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால் இலங்கை ரசிகர்களிடம் முன்னணி வீரர் மேத்யூஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆண்டிகுவா,
பரபரப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுடன் இடம்பெற்றிருந்த இலங்கை எளிதில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திடம் தோல்வியை தழுவிய நிலையில், நேபாளத்திற்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ள அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதனையடுத்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் நாளை மோத உள்ளது.
இந்த நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து இலங்கை சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பேசுகையில், "டி20 உலகக்கோப்பை தொடரில் நாங்கள் தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் கீழே தள்ளிவிட்டோம். அதற்காக ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இப்படி நடக்கும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இதுவரை நாங்கள் ஏராளமான சவால்களை சந்தித்துள்ளோம். ஆனால் அதனை நினைத்து கவலையடைய தேவையில்லை.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாதது சற்றும் எதிர்பார்க்காதது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்காளதேசம் ஆகிய சுற்றுப்பயணத்திலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதேபோல் உலகக்கோப்பையை பொறுத்தவரை எந்த அணியையும் சாதாரணமாக நினைக்க கூடாது.
இதற்கு முன் நாங்கள் விளையாடிய பிட்சுகளுக்கும், டி20 உலகக்கோப்பையில் விளையாடிய பிட்சிற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. ஆனால் இலங்கை அணியின் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எதிர்பாராதது. இன்னும் ஒரு போட்டியில் விளையாட வேண்டும். அதனை பெருமைக்காக விளையாடுவோம்" என்று கூறினார்.