இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் விளையாடுவதுதான் என்னை வலிமையாக்குகிறது - ஜெய்ஸ்வால்
|இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்மூல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டகாரரான ரோகித் 6 ரன்களிலும், கில் டக் அவுட் ஆகியும், கோலி 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். மூவரின் விக்கெட்டையும் ஹசன் மக்மூத் காலி செய்தார்.
இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த ஜெய்ஸ்வால் - பண்ட் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டனர். ரிஷப் பண்ட் தனது பங்குக்கு 39 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த கே.எல். ராகுல் 16 ரன்களில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் ஆல் ரவுண்டர்களான அஸ்வின் - ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் சரிவிலிருந்து மீண்ட இந்தியா முதல் நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்த பின் அரைசதம் அடித்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது, தொடக்கத்தில் வானிலை கொஞ்சம் மேகமூட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் பிட்ச்சில் பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைத்தது. அந்த நேரங்களை நாங்கள் பாதுகாப்பாக விளையாட முயற்சித்தோம். ஹசன் கண்டிப்பாக நன்றாக பந்து வீசினார்.
அதே சமயம் அவர் வீசிய சில சுமாரான பந்துகளில் நாங்கள் ரன்கள் குவித்தோம். எங்கள் கால்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி பேசினோம். சுமாரான பந்துகள் இருந்தால் அதில் ரன்கள் குவிக்க முயற்சித்தோம். முடிந்தளவு பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தோம். இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் சென்று விளையாடுவது சிறப்பாக இருந்தது.
இது போன்ற சூழ்நிலைகள் தான் சவாலான காலநிலைகளில் எப்படி என்னுடைய ஆட்டத்தை விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்து என்னை வலுவாக்குகிறது. ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் வேகமாக நகர்ந்தது. அதனால் நாங்கள் சிறிது நேரம் எடுத்து விளையாடினோம். ஆனால் கடைசி ஷெசனில் நாங்கள் வேகமாக ரன்கள் குவித்து, தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.