< Back
கிரிக்கெட்
வீரர்கள் டிரைவர் வைத்து கார் ஓட்ட வேண்டும் ; ரிஷப் பண்ட் விபத்து குறித்து கபில்தேவ் கருத்து
கிரிக்கெட்

வீரர்கள் டிரைவர் வைத்து கார் ஓட்ட வேண்டும் ; ரிஷப் பண்ட் விபத்து குறித்து கபில்தேவ் கருத்து

தினத்தந்தி
|
3 Jan 2023 5:02 AM IST

முன்னணி கிரிக்கெட் வீரர்கள் டிரைவர் வைத்து கார் ஓட்ட வேண்டும் என்று முன்னாள் வீரர் கபில்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த 30-ந்தேதி அதிகாலை டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு தாயாரை பார்க்க காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். காரை தனியாக ஓட்டிச்சென்ற அவர் தூக்கக்கலக்கத்தில் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் பயங்கரமாக மோதி விட்டார்.

மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக ரிஷப் பண்ட் காயங்களுடன் உயிர் தப்பினார். டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனியார் வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அவரது கால் முட்டு, கணுக்கால், பாதம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டியினர், மேக்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் தொடர்பில் இருப்பதுடன் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணிக்கிறார்கள்.

இன்னும் சில தினங்களில் அவர் வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது. இந்த பாதிப்பில் இருந்து ரிஷப் பண்ட் முழுமையாக மீள்வதற்கு குறைந்தது 6 மாதங்கள் ஆகும்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் தனியாக கார் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், 'இது போன்ற விபத்துகளை நாம் தவிர்க்க முடியும். எனது இளமை பருவத்தில் நான் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது விபத்தில் சிக்கினேன். அதன் பிறகு எனது சகோதரர் என்னை மோட்டார் சைக்கிளை தொட கூட அனுமதித்ததில்லை.

ரிஷப் பண்ட் போன்ற அணியின் முக்கியமான வீரர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். உங்களால், உங்களின் கார்களுக்கு தகுதியான டிரைவரை வேலைக்கு அமர்த்த முடியும். நீங்களே தனியாக காரை ஓட்டிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பலருக்கு கார் ஓட்டுவதில் அலாதி பிரியம் உண்டு என்பதை அறிவேன். ஆனால் நிறைய பொறுப்பில் இருக்கும் ஒருவர் தங்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்' என்றார்.

இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில்,

'இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. ஒரு அணியாக அவர் சீக்கிரம் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களது அன்பும், பிரார்த்தனையும் எப்போதும் அவருடன் இருக்கும். ரிஷப் பண்ட் அணியின் முக்கியமான வீரராக அங்கம் வகித்தார். ஆனால் தற்போது அவர் எந்த சூழலில் இருக்கிறார் என்பதை அறிவோம்.

அவர் இங்கு இருந்திருந்தால் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருப்பார். ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு திறமையான வீரர். ஆனால் இப்போது அணியினருடன் அவர் இல்லை. மற்றபடி இந்த விஷயத்தில் நாம் செய்வதற்கு எதுவுமில்லை.' என்றார்.

மேலும் செய்திகள்