< Back
கிரிக்கெட்
ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரர்: பஞ்சாப் வெற்றிக்கு காரணமானார் - ருசிகர நிகழ்வு

Image Courtesy: Twitter / AFP

கிரிக்கெட்

ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரர்: பஞ்சாப் வெற்றிக்கு காரணமானார் - ருசிகர நிகழ்வு

தினத்தந்தி
|
5 April 2024 4:41 AM GMT

பஞ்சாப் அணி தரப்பில் அதிரடியாக ஆடிய சஷாங்க் சிங் 29 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் கேப்டன் கில் 89 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 70 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து களம் இறங்கிய சஷாங்க் சிங் அதிரடியாக ஆடி பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய அவர் குஜராத் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். சஷாங்க் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய சஷாங்க் சிங் 29 பந்தில் 61 ரன்னும், அசுதோஷ் சர்மா 17 பந்தில் 31 ரன்னும் எடுத்தனர். இதில் அதிரடியாக அடிய சஷாங்க் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தனியாளாக போட்டியை வென்று கொடுத்த இந்த சஷாங்க் சிங்கை தான் மினி ஏலத்தின் போது தவறாக எடுத்துவிட்டோம் இவர் எங்களுக்கு வேண்டாம் என பஞ்சாப் கிங்ஸ் அணி ஒதுக்கியது.

ஐ.பி.எல் ஏலத்தின் போது சஷாங்க் சிங் என்ற பெயரில் 19 வயதில் ஒரு வீரரும், 32 வயதில் ஒரு வீரரும் இருந்தனர். பஞ்சாப் அணி 19 வயது சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுப்பதற்கு பதிலாக தவறுதலாக 32 வயது சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்தது. முதலில் இவரை வேண்டாம் என ஏற்க மறுத்த பஞ்சாப் அதன்பின்னர் ஒருவழியாக வீரரை எடுத்துவிட்டோம் எங்களுக்கு இவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

அந்த பதிவிற்கு பதிலளித்த 32 வயது சஷாங்க், என் திறமை மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என தெரிவித்திருந்தார். ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியால் வேண்டாம் என மறுக்கப்பட்ட சஷாங்க் சின் இன்று (நேற்று) அந்த அணியை ஒரு வரலாற்று வெற்றியை பெறச்செய்துள்ளார். இதன் காரணமாக பஞ்சாப் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருவதுடன், மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்