எட்டு ஆண்டுகள் ஆர்சிபி-க்காக விளையாடினேன்...ஆனால்.... - ஏலத்தில் எடுக்காதது குறித்து சஹாலின் வருத்தம்...!
|பெங்களூர் அணிக்காக 8 ஆண்டுகளாக விளையாடியும் அவர்கள் என்னை தேர்வு செய்யாதது மிகவும் வருத்தமாக இருந்தது என கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சஹால். 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 72 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 121 விக்கெட்டுகளும், 75 டி20 போட்டிகளில் ஆடி 91 விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2022ம் அண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தின் போது ராஜஸ்தான் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்த வீரராக பர்பிள் தொப்பியை வென்றிருந்தார். இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இந்நிலையில் பெங்களூர் அணிக்காக தான் 8 ஆண்டுகளாக விளையாடியும் அவர்கள் என்னை தேர்வு செய்யாதது மிகவும் வருத்தமாக இருந்தது என தற்போது அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பெங்களூரு அணி என்னை ஏலத்தில் எடுக்காததால் நான் வருத்தப்பட்டேன். எனது பயணம் பெங்களூரு அணியுடன் துவங்கிய பிறகு 8 ஆண்டுகள் நான் ஒரு குடும்பமாகவே அந்த அணியை நினைத்து விளையாடினேன்.
ஆர்சிபி-யில் விளையாட ஆரம்பித்ததும் எனக்கு இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.
விராட் கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்தார். அதே போன்று 2022-ஆம் ஆண்டு ஏலத்தில் என்னை நிச்சயம் வாங்குவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதிக பணம் கேட்டதாலேயே வாங்கவில்லை என்ற கருத்து வெளிவந்தது.
ஆனால் நான் அதிக பணம் அவர்களிடம் கேட்கவில்லை. அதோடு ஏலத்தில் நடைபெறவிருந்த தேர்வு குறித்து நிர்வாகத்திடம் இருந்து எனக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை. அது எனக்கு மிகவும் மோசமான ஒன்றாக தோன்றியது. நான் அவர்களுக்காக 8 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். எவ்வளவு விலை போனாலும் என்னை எடுப்பேன் என்று கூறியிருந்தார்கள்.
ஆனால் அது அப்படி நடக்கவில்லை. நான் ஏலத்துக்கு பிறகு ஆர்.சி.பி அணியின் நிர்வாகத்தின் மீது மிகவும் கோபமடைந்தேன். 8 ஆண்டுகள் நான் பெங்களூரு அணிக்காக கடினமான உழைப்பை வெளிப்படுத்தி உள்ளேன். பெங்களூரு மைதானம் எனக்கு மிகவும் பிடித்த மைதானம். பெங்களூர் அணியின் ரசிகர்களை இன்றளவும் நான் விரும்பி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.