< Back
கிரிக்கெட்
ரோகித் சர்மாவுக்கு எதிராக திட்டமிட்டு பந்து வீசினேன் - ஷர்துல் தாக்கூர்

image courtesy: twitter/ @ChennaiIPL

கிரிக்கெட்

ரோகித் சர்மாவுக்கு எதிராக திட்டமிட்டு பந்து வீசினேன் - ஷர்துல் தாக்கூர்

தினத்தந்தி
|
15 April 2024 11:18 AM IST

மும்பை - சென்னை இடையேயான போட்டியில் துபே, ருதுராஜ், ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக ஷர்துல் தாக்கூர் பாராட்டியுள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 29-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 69, சிவம் துபே 66, தோனி 20 ரன்கள் எடுத்தனர். அதை சேசிங் செய்த மும்பைக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதமடித்து 105 போராடினார்.

ஆனாலும் எதிர்ப்புறம் சூரியகுமார் யாதவ், கேப்டன் பாண்ட்யா உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் மும்பை 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் துபே, ருதுராஜ், ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக ஷர்துல் தாக்கூர் பாராட்டியுள்ளார். மேலும் வெற்றியை தீர்மானித்த பதிரனாவின் யார்க்கர் பந்துகள் அபாரமாக இருந்ததாகவும் அவர் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதை விட வான்கடே மைதானத்தின் பெரிய பகுதியில் "முடிந்தால் அடித்து பாருங்கள்" என்ற வகையில் பீல்டிங்கை செட்டிங் செய்து ரோஹித்துக்கு எதிராக திட்டமிட்டு பந்து வீசியதாக தாக்கூர் கூறியுள்ளார்.

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு:- "வெற்றியால் மகிழ்ச்சி. வான்கடேவில் மும்பைக்கு எதிராக வெல்வது கடினம். மும்பை - சென்னை போட்டிகள் எப்போதும் தரமானது என்பதை அனைவரும் அறிவார்கள். ரோகித், ருதுராஜ், துபே சிறப்பாக பேட்டிங் செய்தனர். எங்களுடைய பதற்றத்தை கட்டுப்படுத்தி நாங்கள் வெற்றி கண்டோம். நாங்கள் பந்து வீச விரும்பும் இடத்தில் பீல்டர்களை நிறுத்துவதைப் பற்றி பேசினோம். எனவே பீல்ட்டுக்கு தகுந்தாற்போல் பேட்ஸ்மேனை விட சாதுரியமாக பந்து வீசுவதே எங்களுடைய எளிய திட்டமாகும்.

பதிரனாவை தவிர்த்து எங்களுடைய மற்ற பவுலர்கள் வேகத்தை குறைக்க வேண்டும் என்று உணர்ந்தோம். அவருடைய யார்க்கர்களை பார்த்தது அபாரமாக இருந்தது. வான்கடே மைதானத்தில் இலக்கை கட்டுப்படுத்துவது கடினம். ரோகித் நன்றாக பேட்டிங் செய்தபோது போட்டி கை மீறி செல்வதுபோல எங்களுக்கு தோன்றியது. இருப்பினும் அந்த இடத்தில் நான் சற்று தைரியமாக அவரை மைதானத்தின் பெரிய பகுதியில் அடிக்க விடலாம் என்று கருதினேன். ஒருவேளை அதை பயன்படுத்தி பவுண்டரி அடித்தால் அவருக்கு முழு மதிப்பெண். அதை அவர் தவற விட்டால் போட்டி எங்கள் பக்கம் திரும்பும் என்பதே திட்டமாகும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்