< Back
கிரிக்கெட்
ஒருவேளை ஹெட் இருந்த இடத்தில் கோலி இருந்திருந்தால் பலரும்... - இர்பான் பதான், முகமது கைப் அதிருப்தி
கிரிக்கெட்

ஒருவேளை ஹெட் இருந்த இடத்தில் கோலி இருந்திருந்தால் பலரும்... - இர்பான் பதான், முகமது கைப் அதிருப்தி

தினத்தந்தி
|
3 May 2024 10:31 AM GMT

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்களும், டிராவிஸ் ஹெட் 58 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முன்னதாக இந்தப் போட்டியில் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரரான டிராவிஸ் ஹெட் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக விளையாடினார். பொதுவாகவே 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து விளையாடும் அவர் இப்போட்டியில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை மீட்டெடுப்பதற்காக நிதானமாக விளையாடினார். அந்த வகையில் 15 ஓவர்கள் வரை நங்கூரமாக நிலைத்து விளையாடிய அவர் கடைசியில் அதிரடியாக பினிஷிங் செய்யாமல் 58 (44 பந்துகள்) ரன்களில் 131.82 என்ற சாதாரண ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார்.

இந்நிலையில் இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் இடத்தில் விராட் கோலி இருந்திருந்தால் சொந்த சாதனைக்காக சுயநலத்துடன் பேட்டிங் செய்தார் என்று பலரும் விமர்சித்திருப்பார்கள் என இர்பான் பதான் மற்றும் முகமது கைப் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:-

இர்பான் பதான்:- நீங்கள் என்ன சொன்னாலும் இப்போட்டியில் பவுலிங் நன்றாக இருந்தது.

முகமது கைப்: நீங்கள் சொல்வது சரி. ஒருவேளை இது விராட் கோலியாக இருந்திருந்தால் 44 பந்துகளில் வெறும் 58 ரன்கள் தானா? என்ன இது? என்பது போல் பலரும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி பேசியிருப்பார்கள். ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். பிட்ச் கடினமாக இருந்தது. இருப்பினும் அவருடைய ஆட்டம் போட்டியை மாற்றியது.

இர்பான் பதான்: டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக விராட் கோலி இருந்திருந்தால் இந்நேரம் பலரும் ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி பேசியிருப்பார்கள். ஆனால் இங்கேதான் நாம் அணிக்காக பொறுப்புடன் விளையாடுவதைப் பற்றி பேசுகிறோம். எனவே அனைத்து வீரர்களையும் ஒரே மாதிரியாக நடத்துங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்