சமீபத்திய சில ஆட்டங்களின் முடிவை வைத்து ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை மதிப்பிடுவது நியாயமற்றது - ஹர்பஜன்சிங்
|சமீபத்திய சில ஆட்டங்களின் முடிவை வைத்து ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை மதிப்பிடுவது நியாயமற்றது என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.
மும்பை,
ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நேற்று அளித்த பேட்டியில், 'ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து கொஞ்சம் அதிகமாக விமர்சிக்கிறார்கள். கிரிக்கெட் ஒரு அணி விளையாட்டு. தனிநபரால் அணியை குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்ல முடியாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நன்றாக ஆடவில்லை என்பது உண்மை தான். நீங்கள் அணியின் செயல்பாடு குறித்து பேசிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட வேண்டும்.
ஆனால் ரோகித் சர்மாவை மட்டும் குறி வைத்து விமர்சிப்பது நேர்மையற்றது. உண்மையில் அவர் ஒரு அற்புதமான கேப்டன். அவருடன் நான் இணைந்து விளையாடி இருக்கிறேன். அவரை நெருக்கமாக கவனித்து இருக்கிறேன். அவரது தலைமைத்துவத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓய்வறையில் மட்டுமல்ல, இந்திய வீரர்களின் ஓய்வறையிலும் நிறைய மதிப்பு, மரியாதை உண்டு.
சமீபத்திய சில ஆட்டங்களின் முடிவை வைத்து அவரது கேப்டன்ஷிப்பை மதிப்பிடுவது நியாயமற்றது. இது மாதிரி குற்றம் சாட்டுவதை விட்டு அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பக்கபலமாக இருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தில் அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் இது போன்ற ஆதரவு தான் அவர் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க உதவிகரமாக இருக்கும்' என்றார்.