< Back
கிரிக்கெட்
ஹர்திக் பாண்ட்யாவை விமர்சித்த பதான் பிரதர்ஸ்
கிரிக்கெட்

ஹர்திக் பாண்ட்யாவை விமர்சித்த பதான் பிரதர்ஸ்

தினத்தந்தி
|
29 March 2024 4:30 AM IST

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் 2 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை இந்தியன்ஸ் இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது.

இதனால் அந்த அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யூசுப் பதான் மற்றும் அவருடைய சகோதராரான இர்பான் பதான் ஆகியோர் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப்பை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர்.

இது குறித்து இர்பான் பதான் கூறுகையில், 'ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் மிக சாதாரணமாகவே இருந்தது என்றுதான் சொல்ல முடியும். எதிரணி பேட்டர்கள் அடித்து துவம்சம் செய்து கொண்டிருக்கும்போது, பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ஏன் தாமதமாக பயன்படுத்தினார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்தை அடித்து ஆடுவதில் ஒட்டுமொத்த அணி வீரர்களின் ஸ்டிரைக் ரேட் 200-க்கு மேல் இருக்கும் போது, ஹர்திக் பாண்ட்யாவின் (20 பந்தில் 24 ரன்) ஸ்டிரைக் ரேட் மட்டும் 120-ல் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று விமர்சித்துள்ளார்.

இர்பான் பதானின் சகோதரரும், முன்னாள் வீரருமான யூசுப் பதான் தனது சமூக வலைதள பதிவில், 'ஐதராபாத் அணி 11 ஓவர்களில் 160 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும்போது உங்களது சிறந்த பவுலர் ஒரு ஓவர் மட்டுமே வீசியிருந்தார். இது பாண்ட்யாவின் மோசமான கேப்டன்ஷிப்பையே காட்டுகிறது' என்று விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகள்