< Back
கிரிக்கெட்
இந்திய டெஸ்ட் அணிக்குள் பாண்டியாவை கொண்டு வர வேண்டும் - ஆஸி. முன்னாள் வீரர்

Image Courtesy : PTI 

கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் அணிக்குள் பாண்டியாவை கொண்டு வர வேண்டும் - ஆஸி. முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
4 March 2023 3:07 PM IST

இந்திய டெஸ்ட் அணிக்குள் ஹர்த்திக் பாண்டியாவை கொண்டு வர வேண்டும் என ஆஸி. முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் இந்திய அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கில் கடுமையாக சொதப்பியது. இந்திய அணி 2 இன்னிங்சிலும் பேட்டிங்கில் 109 மற்றும் 163 ரன்களே எடுத்தது.

இந்திய அணியினர் நாதன் லயனின் சுழற்பந்த் வீச்சை அதிரடியாக ஆடாமல் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதால் விக்கெட்டுகள் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. இதனால் இந்திய அணியின் பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. ஆனால் இதில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மிக குறைவாகவே ஓவர்கள் வீசுகிறார். இதனால் இந்திய அணி அவருக்கு பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் குறையை சரி செய்ய ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் இயன் சாபேல் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது,

இந்திய டெஸ்ட் அணியில் ஹர்த்திக் பாண்டியா ஏன் இடம் பெறவில்லை என எனக்கு புரியவில்லை. நிறைய பேர் சொல்கிறார்கள் ஹர்திக் பாண்டியாவால் டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை வீச முடியாது என்கின்றனர்.

ஆனால் உங்களிடம் நான் கேட்பதெல்லாம் நீங்கள் மருத்துவ நிபுணர்கள் பேச்சை கேட்கிறீர்களா? இல்லை கிரிக்கெட் நிபுணர்களின் பேச்சை கேட்கிறீர்களா? ஹர்திக் பாண்டியா நான் விளையாடுகிறேன் என்று நினைத்தால் அவரை கண்டிப்பாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும்.

அவர் நல்ல பேட்ஸ்மேன், நல்ல பந்துவீச்சாளர், சிறந்த பீல்டர். ஆஸ்திரேலிய அணி தங்களது சமநிலையை அடைய கேமரான் கிரீனை அணிக்குள் கொண்டு வந்தார்கள். அதே போல் இந்திய அணி ஹர்த்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாண்டியா கடைசியாக 2018ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்